சேலம் மாவட்டம், தலைவாசல், காரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் ஹட்சன் தனியார் பால் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் செல்வமுத்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (செப்.26) சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சேலம் மாவட்டம், காரிப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஹட்சன் பால் நிறுவனம் தமிழ்நாடெங்கும் 14 கிளைகள் மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் தயாரித்து இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனம், கொள்முதல் செய்யப்படும் சுத்தப்படுத்த ஆசிட் கலந்த ரசாயன நீரை பயன்படுத்தி வருகிறது. அந்த ரசாயன நீரிலிருந்து வரும் கழிவு நீரை, நிறுவனத்திற்குள் மிகப்பெரிய ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைத்து சேமித்து வருகின்றனர்.
இதனால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு நீர் விஷமாக மாறி விட்டது. மேலும் இதன் காரணமாக விவசாயமே செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரிசெய்யக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சுற்றுச்சூழல் துறை அலுவலர்களுக்கும் முன்னதாக புகார் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரே ஒருமுறை மட்டுமே சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஹட்சன் நிறுவனத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, ஹட்சன் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்தனர் .
அதன்பிறகு ஹட்சன் நிறுவனம் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் மின் இணைப்பை பெற்று அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து அந்நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும்.
இல்லையென்றால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்த முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மீது புரட்சி பாரதம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு