சேலம்: பெரியபுத்தூர் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆலைக்கரும்பு, மாட்டுத்தீவனம் உள்ளிட்டவைகளை பயிரிடப்பட்டு வருகின்றனர். பெரியபுத்தூர் அணையில் இருந்து ராஜவாய்க்கால் நீரோடையின் மூலமாக வரும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீரோடையின் நடுவில் கான்கிரீட் போடப்பட்டு உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை மின்சாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் செல்லும் நீரோடையை அடைத்து உயர் மின்கம்பம் அமைப்பதால் கடந்த சில நாள்களாக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதலில் நீரோடையின் ஓரமாக உயர் மின்கம்பம் அமைப்பதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்த நிலையில், நீரோடையின் நடுவே பில்லர் அமைத்து பணிகளை மேற்கொண்டு வருவதால் பாசனப்பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளைக் காடாக மாறிவிடும் என்றும் இதனால் பாசனப்பகுதி முழுவதும், விவசாயம் செய்ய வழியில்லாத நிலைமை ஏற்படும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் கூறுகையில், “நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள், திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் நீரோடையை ஆக்கிரமித்து உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க கான்கிரீட் போட்டுள்ளனர்.
இதனால் கனமழை பெய்யும்பொழுது ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறி விவசாயம் அழிந்து போகும் ஆபத்து உள்ளது. உடனே அந்த மின் கோபுர பணியை நிறுத்திட அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிட்டிங்களா?... அமைச்சர் கொடுத்த அப்டேட்!