சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டம் அறிவித்த நாள் முதலே பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்த நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தின் பணிகளை மேற்கொள்ள, நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.
இந்த நிலையில், இத்திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மத்திய அரசு நேற்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த மேல்முறையீட்டு முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் நாழிக்கல் பட்டியில், 8 வழிச்சாலைத் திட்டத்தினால் பாதிக்கப்படவுள்ள விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், "தமிழ்நாடு அரசு தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாட்டிலும் தேர்தல் முடிந்த பின்பு ஒரு நிலையிலும் உள்ளது. தேர்தலின்போது 8 வழிச்சாலை திட்டம் வராது என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்தனர்.
அப்போதும் கூட தமிழ்நாடு மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்த விரக்தியில் மத்திய அரசு தடையை நீக்கக் கோரி மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் இந்த எட்டு வழிச்சாலையை எங்கள் பகுதியில் அமைய விடமாட்டோம். எங்கள் உயிர் உள்ளவரை இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் நாங்களும் எதிர்க்க தயாராக உள்ளோம். நாங்களும் மேல்முறையீடு செய்வோம். எங்களுடைய அனைத்து மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம்‘ என தெரிவித்தனர்.