சேலம்: தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் வேளாண் துறைக்கு என அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் இன்று (ஆக. 10) செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முக்கியப் பயிராக மரவள்ளிக்கிழங்கு வேளாண்மை செய்யப்பட்டுவருகிறது.
சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள இந்த மரவள்ளி பயிரில் தற்போது மாவுப்பூச்சி, செம்பேன் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.
எனவே அரசு தாமதம் செய்யாமல் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் நேரடி கள ஆய்வு நடத்தி பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண்மைத் துறைக்கு எனத் தனி பட்ஜெட் தாக்கல்செய்யப்பட இருப்பதை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.