சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் காட்டெருமை , கரடி, நரி, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயியான மாணிக்கம். இவர் நேற்று முட்டல் வனப்பகுதிக்குச் சென்று, அங்கு 12 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை வேட்டையாடி, அதனை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து, வேட்டையாடிய புள்ளிமானை, தனது மகளின் திருமணத்தையொட்டி வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுக்குக் கறி சமைத்து உணவளிக்க முடிவு செய்துள்ளார். இத்தகவலறிந்த ஆத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்ததில் மாணிக்கம், புள்ளிமானை வேட்டையாடி , கறியை சமையல் செய்ய முயற்சித்தது தெரியவந்தது .
இதையடுத்து அவரைக் கைது செய்த வனத்துறையினர், 40 கிலோ மான்கறி, மான் கொம்புகள், மான் தோல் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனர். பின் கைது செய்யப்பட்ட மாணிக்கத்திற்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து, மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மகளின் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்காக மான்கறி விருந்து செய்யத் திட்டமிட்டிருந்த விவசாயியின் செயல் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஓசி சிகரெட் தராத டீ கடைக்கு தீ வைப்பு!