சேலம் மாவட்டம், ஆத்தூர் உள்ளிட்ட மலை சூழ்ந்த பகுதிகளில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் ஆகியவை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு போலி மது விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, மதுவிலக்கு காவல் துறையினர் நேற்று இரவு (ஆக. 22) மணிவிழுந்தான் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த பூக்காரத் தோட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 53) என்பவர் தனது வீட்டுக்குள், இயந்திரம் வைத்து போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, அவரது வீட்டிலிருந்து 1,100 மது பாட்டில்கள், 140 லிட்டர் எரிசாராயம், போலி மதுபானங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய இரு ஆம்னி கார்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக போலியான மதுபானங்களைத் தயாரித்த சந்திரசேகரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
கரோனா ஊரடங்கு காலத்திலும் வீட்டிலேயே போலி மது ஆலை நடத்திய நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் காரில் கடத்திவரப்பட்ட 500 மது பாட்டில்கள் பறிமுதல்!