சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கயல்விழி, 'தமிழ்நாட்டில் 1400-க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் உள்ளன. சமீபகாலத்தில் குறைந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இத்துறையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை செய்து வருகிறோம். அரசு திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
தாட்கோ மூலமாக பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கும், தொழிற்பயற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலமாக தனியாக இணையசேவை உருவாக்கி அவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வியில் முன்னேற்றம் அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்குப் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க:மாணவி மரணத்தை அரசியல் ஆக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு