சேலம்: தமிழ்நாட்டில் பிரதமரின் ஏழு ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சேலத்தில் பாஜகவைச் சேர்ந்த கே.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் 9.42 கோடி உழவர்கள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசு கொண்டுவந்ததாக திமுக பொய் பரப்புரை செய்துவருகிறது. நாடு முழுவதும் 2016 வரை 27 விழுக்காடாக இருந்த ஏழை மக்களின் எண்ணிக்கை தற்போது 8.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
வரும் 5ஆம் தேதி, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து, தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் பாஜக சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும்.
அணில்தான் கதாநாயகன்
தமிழ்நாட்டில், மின் கணக்கீடு விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உளறுகிறார். மின்தடையை ஏற்படுத்தும் புதிய அணில் இனத்தை செந்தில் பாலாஜிதான் கண்டுபிடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்து திமுக அரசு, சொன்ன தேதியில் வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? 100 நாள் திமுக ஆட்சியில் ஸ்டாலின் கதாநாயகன் அல்ல; அணில்தான் கதாநாயகன் ஆகியுள்ளது. இனி வரும் நாள்களில் யானை, புலிகூட கதாநாயகன் ஆகலாம். ஆனால் மு.க. ஸ்டாலின் ஆக மாட்டார்.
அரசியல் அதிகாரத்தால் அல்ல
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் குறையவில்லை. இதுவரை இல்லாத வழக்கமாக ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூட்டியுள்ளார். தமிழ்நாடு அனுமதிக்காதவரை காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட முடியாது.
தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க சட்ட ரீதியான அதிகாரம் படைத்த நதிநீர் ஆணையத்தால்தான் முடியும். அரசியல் அதிகாரத்தால் அல்ல" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது: மாநகராட்சி