சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த சூரியூர் கிராமம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பகுதியாகவே உள்ளது. காப்புக்காடுகளுக்கு நடுவே உள்ள சூரியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாகக் குடியிருந்துவருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து நேற்று காவல் துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டு வனத் துறை சார்பில் அங்கு வசித்துவந்த மக்களின் குடிசைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சூரியூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சேலம் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமித்து விசாரணை நடத்த வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஏன் என்றும் இரு தரப்பினரிடையே கருத்து கேட்டு 10 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஒரு நபர் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் நீதிபதி ராஜாராம் இன்று நேரில் சென்று சூரியூர் கிராமத்தில் விசாரணை நடத்தினார். அப்போது, வீடுகளை அகற்றப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு சூரியூர் மக்களின் கோரிக்கைகள், பெயர் விவரங்களை கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: கோவையில் 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் தடை