சேலம்: தமிழக தொழிற்சங்க உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 10) சேலத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழகத்தில் கட்டுமானத் தொழில் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என திமுக இரட்டை வேடம் போடும் கட்சியாக உள்ளது.
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்ப்பதாகத் தெரிவித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் கம்பி, ஜல்லி, எம்.சாண்ட், செங்கல் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கண்டுகொள்ளாத அரசாக திமுக உள்ளது.
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வால் பல்வேறு கட்டடங்கள் பாதியில் நிற்கின்றன. புதிய கட்டடங்கள் வராமல் உள்ளது. கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த முதியோர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு ரூ.1000 முதியோர் உதவித்தொகை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 90 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் அரசுக்கு எதிரானவர்களா? முதியோர் உதவித்தொகை நிறுத்திய அரசு மக்கள் விரோத அரசாகத்தான் பார்க்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை, கட்டுமான கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த முதியோர்களுக்கான உதவித்தொகை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், அதிமுக ஆட்சியில் ரூ.3.05 லட்சம் கோடியில் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது.
புதிய தொழில் முதலீடுகள் வரும்போது தான் கட்டுமானத் தொழில் வளர்ச்சி பெறும். அதிமுக அரசு 31 ஆண்டுகள் கால ஆட்சியில் சமூக பொருளாதார வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்து தந்தது. அதிமுக ஆட்சியில் மாதம் ரூ.6 ஆயிரம் இருந்தால் குடும்பம் நடத்தி விடலாம்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. தற்போது ரூ.9 ஆயிரம் இருந்தால் தான் குடும்பம் நடத்தும் அளவுக்கு அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்துவிட்டது.
திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தனர். ஆட்சிக்கு வந்து இதுவரை உரிமைத் தொகை வழங்கவில்லை. வரும் செப்டம்பர் மாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றனர். இதுதான் திமுகவின் இரட்டை வேடமாகும். திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கவர்ச்சிகரமாக பேசுவார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றிப் பேசி நிபந்தனை பேசுவார்கள்.
அதிமுக ஆட்சியில் மினி கிளினிக் அமைத்து ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் மினி கிளினிக்கை மூடிவிட்டனர். அதேபோல சுமார் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டத்தை நிறுத்திவிட்டனர்.
அதேபோல நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று 9 பேர் என்ற எண்ணிக்கையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் 564 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
ஏழை, எளிய உழைக்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் காலமாகிவிட்டது. ஆனால், எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை முடித்து திறந்து வைத்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள கோத்ரேஜ் நிறுவன உற்பத்தி ஆலை..!