சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ' இன்று(அக்.5) அய்யாதுரை பாண்டியன் தலைமையில் பத்தாயிரம் பேர் அதிமுகவில் இணைவதற்கு முன்னோட்டமாக 100க்கும் மேற்பட்டோர் எனது முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதில் உச்ச நீதிமன்றம் எந்த தடை உத்தரவையும் போடவில்லை. ஊடகங்கள், பத்திரிகைகள் தான் தவறாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது.
சில பேர் மேல்முறையீடு செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தடையாணை கேட்டுள்ளனர். அதற்கு எங்களது வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி 95% விழுக்காடு அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூட்டம் கூடாது.
அதற்கு நாங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளோம்’ என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'தமிழ்நாடு அரசு மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பணிகளை முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து தான் திமுக அரசு செயல்படுகிறது. கோவை மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒப்பந்த பணிகள் 20க்கும் மேற்பட்ட முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் கமிஷன் அதிகம் கேட்பதே. கரோனா பேரிடர் காலத்தில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் வரி உயர்வு கொடுத்து மக்களை துன்பத்திற்கும் வேதனைக்கும் தள்ளி உள்ளது திமுக அரசு. மேலும் திமுக தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றனர். ஆனால், இன்று என்ன நடக்கிறது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது, திமுக அரசு ' என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது சேலம் மாநகர மாவட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:‘பாரத் ராஷ்டிர சமிதி’ - புதிய தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ்