சேலம்: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 13) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "சேலம் மாநகராட்சிக்கு என எந்தத் திட்டமும் திமுக கொண்டுவரவில்லை.
பொய் பேச நோபல்
அதிமுகவால் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்து-வருகிறார். நாங்கள் செய்த சாப்பாட்டை, அவர் சாப்பிட்டுவருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால், அதை ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும். திமுக குடும்பமே பொய் பேசித்தான் ஆட்சி செய்கிறது.
அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்தக் கட்சியை ஒரு ஏஜென்ட்தான் நடத்திவருகிறார். அதிமுகவிலிருந்து திமுகவுக்குச் சென்ற எட்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். திமுகவில் உழைத்தவர்களுக்கு நாமம் போட்டுவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் எனக் கூறியது அனைவருக்கும் தெரியும். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இப்போது நீட் தேர்வை கொண்டு வந்தது அதிமுகதான் என்று ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறுகின்றனர். யார் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்று பொது இடத்தில் விவாதிக்க நாங்கள் தயார். திமுகவினரும் வந்து எங்களுடன் வாதம் நடத்துங்கள். பொதுமக்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பளிக்கட்டும். மடியில் கனமில்லை, அதனால் வழியில் எங்களுக்குப் பயமில்லை.
திமுக சதித்திட்டம்
சேலம் மாவட்டத்தில் ஒரு திட்டம்கூட நிறைவேற்றப்படவில்லை எனக் கூறும் ஸ்டாலினுக்கு, மேம்பாலங்கள் கண்ணில் தெரியவில்லையா? பச்சை பொய் பேசுகிறார் ஸ்டாலின். முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற திமுக சதித்திட்டம் தீட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆளுநரிடம் மனு வழங்கியுள்ளோம். தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: இட்லி சுட்டு வாக்குச் சேகரித்த வேட்பாளர்!