சேலம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும், தங்களது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (பிப்ரவரி 11) சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில், திறந்த வெளி மேடையில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பரப்புரை மேற்கொண்டார்.
‘வீட்டுக் கதவை கூட தொட முடியாது’
அப்போது பேசிய அவர், “அதிமுக மட்டும் தான் சாதாரண ஏழை மக்களை உயர்த்துகின்ற கட்சி. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்சனைகளை தீர்க்கின்ற அமைப்பு அதிமுக. அதிமுக வென்றால் அனைத்தும் நிறைவேறும். கன்னங்குறிச்சி மீண்டும் அதிமுக கோட்டையாக மாறும். அதன் வெற்றி மலர்ச்சி தெரிகிறது.
நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவன். கன்னங்குறிச்சியில் இருந்து இருபது நிமிடங்களில் என் வீட்டிற்கு வந்து விடலாம். என்னை எப்போதும் சந்திக்கலாம். ஆனால் திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் வீட்டுக் கதவைக் கூட தொட முடியாது.
நீங்கள் ஆதரவு கொடுத்து உங்கள் ஆசியோடு நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஆட்சி நடத்தினோம். எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றினோம். நாட்டிலேயே முதல் மாநிலமாக வந்தது.
‘மக்களுக்கு நாமம் போடும் அரசு திமுக’
கரோனா காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை காத்தோம். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கினோம். நான் கிராமத்தில் பிறந்தவன். மக்களோடு மக்களாக வாழ்பவன். பசியுடன் யாரும் இருக்க கூடாது என்று அம்மா உணவகம் மூலம் இலவச உணவு வழங்கினோம்.
2021 தேர்தலில் ஸ்டாலின் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உதயநிதி ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார். 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கரூரில் பேசுகிறார்.
இது குறித்து மக்கள் கேள்வி கேட்டதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளது தருகிறோம் என்கிறார். நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் மக்களுக்கு பட்டை நாமம் தான் போடுவார்கள்.
‘ஓட்டு போட்டவர்களுக்கு ஃபைன்’
கூட்டுறவு வங்கிகளில் நகைகளை வைத்து பணம் பெற்றவர்களின் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார் ஸ்டாலின். இப்போது ஓட்டு போட்டவர்களுக்கு வேட்டு வைத்து விட்டார்கள்.
அதாவது 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்கிறார்கள். மீதி பேர் அசலும் வட்டியும் கட்ட வேண்டும். திமுகவுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஃபைன். ஆட்சிக்கு வரும் வரை பொய் பேசுவது. வந்ததும் மக்களை மறந்துவிடுவது.
பொங்கல் பரிசு சென்ற ஆண்டு 2500 ரூபாய் கொடுத்தோம். 5000 ரூபாய் கொடுக்க வேண்டாமா என்றார் ஸ்டாலின். இப்போது அவர் கொடுக்க வேண்டியது தானே.
பொங்கல் பரிசு குறைபாடு குறித்து புகார் அளித்த நபரின் மகன் தற்கொலை செய்து கொண்டார். மறக்கவே முடியாது இந்த தைப்பொங்கல். 500 கோடி சுருட்ட தான் பொங்கல் பரிசு கொடுத்தார்கள். மக்களை வஞ்சித்த அரசு திமுக அரசு.
இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் என்று அவர்தான் கூறிக் கொண்டு இருக்கிறார். இந்த 9 மாதத்தில் ஈசிஆர்இல் சைக்கிள் ஓட்டுகிறார். டீ குடிக்கிறார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்.
ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தோம்
நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். அப்போது திமுக கூட்டணியில் தான் இருந்தது. நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயார். நான் அரசு பள்ளியில் படித்தவன். எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மாணவர்கள் இடம் பெற 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். இந்த ஆண்டு மட்டும் சுமார் 500 பேர் மருத்துவம் படிக்க சென்றுள்ளனர்.
11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். ஆறு சட்டக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா 1000 ஏக்கரில் கொண்டு வந்தோம். இப்படி ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தோம். அம்மா மினி கிளினிக் திறந்தோம். அதைக் கூட பொறுக்க முடியாமல் மூடிவிட்டார்கள் .
குடும்ப அரசியல்
தாலிக்கு தங்கம் திட்டத்தை மூடவும் பார்க்கிறார்கள். அம்மா உணவகம் மூட பார்க்கிறார்கள். அம்மா சிமெண்ட் என எல்லாவற்றையும் மூட முயல்கிறார்கள். ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். கருணாநிதி, ஸ்டாலின், அடுத்து உதயநிதி. இங்கே என்ன பட்டா போட்டு இருக்கா. குடும்பத்தினர் மட்டும் தான் திமுகவில் பதவி பெற முடியும். அங்கே ஜனநாயகம் இல்லை.
அதிமுகவில் இருந்து திமுக போன எட்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்கிறார்கள். திமுகவில் உள்ளவர் மனம் நொந்து போய் இருக்கிறார்கள். ஆற்று மணலை அரசே விற்கும் என்று சட்டம் கொண்டு வந்தோம். இவர்கள் மணல் கொள்ளையை நடத்த வழி விட்டுள்ளார்கள்.
ஒரு யூனிட் மணல் சென்னையில் 13 ஆயிரம் ரூபாய். ஆனால் அரசுக்கு 1000 ரூபாய் தான் கட்டுகிறார்கள். ஆளை மிரட்டுவது திமுக வேலை. தெம்பு திராணி இருந்தால் அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள வேண்டும் திமுக. தில்லு முல்லு செய்து திமுக வெற்றி பெற முயற்சிக்கின்றனர். மக்கள் அதை முறியடித்து அதிமுகவை வெற்றி பெற செய்யுங்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'அடுத்த தேர்தலில் செந்தில் பாலாஜி எந்த கட்சிக்கு போவாரென்று அவருக்கே தெரியாது'