திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நிகழ்சிகளுக்காக இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (மே 14) மாலை 4 மணிக்கு வருகை தருகிறார். இதற்காக வத்தலக்குண்டு சாலை வழியாக கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு மேலே செல்லவும், கீழே இறங்கி செல்லவும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து தடை செய்யட்டது.
பின்னர் ஆளுநர் இரவு தங்கி, நாளை (மே 15) காலை நடைபெறும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு, மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பழனியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கொடைக்கானல் நகருக்கு வருகை தந்த ஆளுநர் ரவியைக் கண்டித்தும் கருப்புக் கொடி காட்ட முயன்றனர்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் தமிழ் மொழிக்கு எதிராகவும் ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஆளுநர் ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற நிலையில், அவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை, ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட செல்ல முயன்ற நிலையில் பழனி - கொடைக்கானல் சாலையில் சோதனைச் சாவடியில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும், திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆளுநருக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு வாகனத்தில் ஏறி தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!