சேலம் மாவட்டம் ஓமலூர் கடைவீதி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் குட்டி. இவர் அப்பகுதியில் திருமண மண்டபம் நடத்திவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு நாய் ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார். தினமும் காலை, மாலை நேரங்களில் அந்த நாயுடன் அவர் வாக்கிங் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மாலையில் வெளிநாட்டு இன நாய் வீட்டு முன்புறம் நின்று கொண்டிருந்தபோது மாயமானது.
தனது செல்ல நாய் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்த குட்டி, தனது உறவினர்கள் மூலம் நாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர் என அனைவரும் ஓமலூர் பகுதி முழுவதும் தெருத்தெருவாக சென்று நாய்க்குட்டியை தேடினர். ஆனால் நாய் கிடைக்கவில்லை.
பின்னர் வீட்டுக்கு வெளியில் வைத்துள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கவனித்துள்ளனர். அதில் இளைஞர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வருவதும், நாய்க்குட்டியை இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்து செல்வதும் தெரிந்தது.
பின்னர் இளைஞரின் அடையாளத்தை வைத்து அவர் யார்? என்பது குறித்து உறவினர்களே விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த இளைஞர் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே வசிப்பவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்ற குட்டி, நாய் குட்டியை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர் நாய்குட்டி தெருவில் இருந்ததினால்தான் எடுத்து வந்தேன் என கூறி, நாய்குட்டியை அவரிடம் கொடுத்துவிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதையும் படிங்க:ஜவுளிக் கடையில் துணிகள் திருடிய இரண்டு பெண்கள் கைது!