சேலம் மாவட்டம், எடப்பாடி - கொங்கணாபுரத்தில் திமுகவின் கிராம சபைக் கூட்டம் இன்று (ஜன.17) நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் பெண்கள் சார்பாக பலர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், 'திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். தனது தொகுதியான எடப்பாடியில்கூட முதலமைச்சர் பழனிசாமி எவ்வித வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை'என்றார்.
வேலைவாய்ப்புகள் குறித்து பேசிய ஸ்டாலின் ஏறக்குறைய 9ஆயிரத்து 800 பேர் விண்ணப்பித்த வேலைவாய்ப்புப் படிவங்களை ஆதாரமாக காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர்,'எம்ஜிஆரால் தான் கலைஞர் ஆட்சிக்கு வந்தார் என மரியாதைக்குரிய பழனிசாமி சொல்லிவருகிறார். அது தவறு; வரலாறு தெரியாமல் பேசுவது தவறு' எனச் சுட்டிக் காட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்து அதிமுகவுக்கு முடிவு கட்டத் தேவையில்லை, மாறாக வருகின்ற 26ஆம் தேதி சசிகலா விடுதலைக்குப்பிறகு இவர்களின் ஆட்சி தானாக முடிவுக்கு வந்து விடும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:பயிர்ப் பாதிப்பு விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - கூட்டணி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி!