சேலம்: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசியது விவாதப் பொருளானது.
அன்மையில் நீட் தேர்வு காரணமாக சென்னையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த துக்கத்தில் அவரின் தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது.
அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடைபெற்ற போரட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வ கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் தமிழக ஆளுநரை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் சென்ற சில திமுகவினர் ,போராட்டம் முடிவதற்கு முன்பாகவே பசியாறிக் கொண்டனர்.நேற்று திமுக மாநில இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,' உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வோர் எதுவும் உண்ணக்கூடாது, மாலை 5 மணி வரை உண்ணாவிரத பந்தலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாமூல் கேட்டு மிரட்டி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கு - தனியார் மாத இதழ் ஆசிரியர் கைது!