சேலம்: சேலம் மாநகராட்சி அவசர கூட்டத்தில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்டுவது தொடர்பாக திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அவசர அவசரமாக தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சி கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.
சேலம் மாநகராட்சியின் அவசர மாமன்ற கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி பொறுப்பு ஆணையர் அசோக்குமார் மற்றும் துணை மேயர் முன்னிலையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11 ஆம் தேதி, சேலத்தில் உள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் ஆகியவற்றை திறந்து வைப்பது குறித்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், யாதவமூர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: பட்டியலினத்தவர் என்றால் இப்படி செய்வீர்களா? - ஊராட்சி துணைத் தலைவர் குற்றச்சாட்டு!
அப்போது கருணாநிதியின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது, மற்றொரு மூத்த திமுக கவுன்சிலர் கலையமுதன், தனது வார்டில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன, ஆகையால் மக்கள் முன்னே தலை காட்ட முடியவில்லை, அதை எப்போது நிறைவேற்றி தருவீர்கள்? இப்படி முக்கியமான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் பெயர் சூட்டுவது குறித்து, ஏன் இவ்வளவு நேரம் அவசர அவசரமாக கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் சாந்த மூர்த்தி அவரை அமரும்படி கூறினார். இதனால் திமுக கவுன்சிலர்கள் இடையே மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் திமுக கவுன்சிலர் பேசிக் கொண்டிருந்த பொழுது மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் துணை மேயர் பொறுப்பு ஆணையார் ஆகியோர் இருக்கையை விட்டு எழுந்து வெளியேறினர். மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் காரசாரமாக பேசிக்கொண்டு வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஹஜ் புனித யாத்திரை: முதல் குழு இன்று ஜெட்டா பயணம்!