கரோனோ வைரஸ் நோய் தொற்று சமூக பரவல் மூலம் பொதுமக்களுக்கு தொற்றாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இச்சூழலில் திமுக ஊராட்சி தலைவர், முன்னாள் உள்ளாட்சி மன்ற திமுக பிரதிநிதிகள் அத்தியாவசிய தேவை பொருட்களை நிவாரணமாக வழங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீராணம் ஊராட்சி பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியின் ஊராட்சித் தலைவர் ஆறுமுகம் தனது சொந்த செலவில் அங்கு வசிக்கும் மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கினார்.
இதற்காக நடைபெற்ற விழாவில் சேலம் திமுக கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வீரபாண்டி ராஜா, பொது மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
அதேபோல் சேலம் கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, குமரகிரி ஆகிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளும் சேலம் மாநகராட்சியைச் சேர்ந்த 2,500 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி பைகளை, சேலம் அறிஞர் அண்ணா நூலக அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் குணசேகரன் வழங்கினார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கரோனோ நிவாரண உணவுப் பொருட்களை வழங்கிவருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.