சேலம்: சேலத்தில் உள்ள தமிழ் திரையுலகின் முக்கிய அடையாளமான 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தின் நினைவு வளைவான ஆர்ச் பகுதியை அபகரித்து அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை நிறுவ சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முயல்வதாக நிலத்தின் உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச்' (Salem Modern Theatres Arch) அமைந்துள்ள பகுதி தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என அதிகாரிகள் சர்வே செய்து அதில் முட்டுக்கல் நட்டு வைத்துவிட்டு சென்றனர். இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்ச் அமைந்துள்ள பகுதியின் உரிமையாளர் வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா செய்தியாளர்களுக்கு இன்று (டிச.14) பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், 'சேலம் மாநகரில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது, மார்டன் தியேட்டர்ஸ். இங்கு தற்போது படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை; படப்பிடிப்பு தளம் உள்ளப் பகுதியில் சட்டத்தின்படி, குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் பல்வேறு முன்னணி தமிழ்த்திரை நடிகர்களை உருவாக்கிய நிறுவனம் இது. கடந்த 2004-ல் ரவிவர்மா என்பவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகம் இந்த நிலத்தை விற்பனை செய்தது.
இதையடுத்து மார்டன் தியேட்டர்ஸ் தற்போது வீட்டுமனைகளாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற பெற்ற மாடன் தியேட்டர்ஸ் வளாகம் வீட்டுமனைகளாக ஆனாலும், அதன் முகப்பு பகுதி தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரவிவர்மா என்பவர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், அவரின் சேலம் வருகையின்போது நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் 2023, ஜனவரியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்டன் தியேட்டர்ஸ் ஆர்ச் பகுதியைப் பார்வையிட்டதோடு, ஆர்ச் முன்பு செல்பி எடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது முதல் அமைச்சர் புகைப்படம் எடுத்த தருணம் முதல் மாடன் தியேட்டர்ஸ் நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுத்தியது' என்றார்.
திடீர் சந்திப்பிற்கு அழைத்த முதலமைச்சர்..! காரணம்?: 'அன்றிரவே மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், ரவிவர்மா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனரான என்னை நேரில் அழைத்து தமிழக முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார். அதன்படி, ரவி வர்மா கன்ஸ்ட்ரக்சன் மேலாண்மை இயக்குனர் விஜயவர்மாவான நானும், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் ஆகிய 3 பேரும் சந்தித்துப் பேசினோம். அப்போது முதலமைச்சர், மாடன் தியேட்டர்ஸ் இடத்தை பராமரித்து வருவதற்கு பாராட்டினார். மேலும், 'அங்கு உள்ள 1,345 சதுர அடி நிலம் வேண்டும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள், நான் உங்களை கட்டாயப்படுத்தவில்லை' என முதலமைச்சர் கூறினார்.
கருணாநிதி சிலை வைக்கும் ஐடியா?: மேலும் பேசிய அவர், 'இதற்கு நான் எனது குடும்பத்தினருடன் கலந்து பேசிவிட்டு சொல்வதாக கூறிவிட்டு வந்துவிட்டேன். பிறகு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் முன்னாள் முதலமைச்சர் 'கருணாநிதியின் சிலை'யை வைக்க முதலமைச்சர் விரும்புகிறார். அதனால், அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் எனக்கூறி, பலமுறை தனிப்பட்ட முறையில் நேரில் என்னை அழைத்து தெரிவித்தார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததோடு, யோசித்து சொல்வதாகவும் கூறினேன்.
ஆனால், அவர் விடுவதாக இல்லை. இந்த நிலையில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் என்னை நேரில் சந்தித்து ஆர்ச் அமைந்துள்ள பகுதியில் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரிடம் நான், 'மாடன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி நினைவுச் சின்னமாகவும்; 3 முதலமைச்சர்களையும் பல்வேறு திரையுலக ஜாம்பவான்களையும் உருவாக்கிய இடம் என்பதால் அதை சிறிய அருங்காட்சியமாக அமைக்க சொந்த செலவில் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருந்தேன்.
இதையும் படிங்க: மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தில் கருணாநிதி சிலை?.. சிக்கலை சந்தித்து வரும் மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பம்..! பின்னணி என்ன?
ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் அச்சுறுத்தல்: இந்நிலையில், முதலமைச்சர் கேட்டது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் யோசித்து முடிவு செய்து சொல்வதாக தெரிவித்தேன். இதனிடையே, சேலம் மாவட்ட ஆட்சியர் திடீரென மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அனுப்பி சம்மந்தப்பட்ட மாடன் தியேட்டர்ஸ் உள்ள முகப்பு பகுதியை திடீரென அத்துமீறி அளவீடு செய்தார். அப்போது ஏன்?.. இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்ட என்னை ஆட்சியர் கார்மேகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என்னை அச்சுறுத்தினர்.
ஒருமையில் பேசிய அரசு அலுவலர்கள் அலுவலகத்தை இடித்து தள்ளினர்: என்னுடைய பேரில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி மற்றும் 1,345 சதுரடி நிலம் உள்ளதற்கான அனைத்து ஆதாரங்களும் வருவாய்த்துறையின் சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களைக் காட்டியும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல், என்னை ஒருமையில் பேசி அவமரியாதை செய்தனர். மேலும், எனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலம் கோரிமேடு தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக, தமிழ்நாடு ஹவுசிங் போர்டுக்கும் எனக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் அத்துமீறி அங்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை மற்றும் அலுவலகத்தை அத்துமீறி நுழைந்து ஜேசிபி வாகனம் மூலம் இடித்து தள்ளினர்' என குற்றம்சாட்டியுள்ளார்.
அராஜகத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை எச்சரித்த நீதிமன்றம்: 'இது குறித்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில், நீதிமன்றமும் அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளது. இதனிடையே, எனக்கு சொந்தமான மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்திற்குள் நுழைந்து அதிகாரிகள், 'நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம்' எனக் குறிப்பிட்டு முட்டுக்கல் நட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.
எனக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்? என்று எனக்கு வேதனை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் நேரடியாக களத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அளவீடு செய்ததை நேரில் பார்வையிட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இத்தனை அத்துமீறல்களையும் நான் சந்தித்து வருகிறேன்' என்று வருந்தினார்.
எமக்கே இந்நிலையெனில், சாமானியர்களின் நிலை எப்படியிடிருக்கும்?: 'ஏற்கனவே, நான் சேலம் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பதவி வகித்து வந்தேன். மேலும் என்னுடைய தந்தை சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி. என்னுடைய தாய்மாமன் தற்போதைய புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். என்னுடைய மாமனார் திமுக சார்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர். ஆக, இத்தனை அரசியல் பின்புலம் இருந்தும் எனக்கே, இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை? என்று நினைத்துப் பார்த்தாலே, மனதில் அச்சம் எழுகிறது. மாவட்ட நிர்வாகம் நேரடியாக என்னை அச்சுறுத்தி வருகிறது.
ஆதரவு கரம் நீட்டும் அரசியல் கட்சிகள்; நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புறக்கணிப்பு: இதனால், எனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என் தந்தை நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில், அவரை ஒருமையில் திட்டுவதும் அதிகாரிகள் அச்சுறுத்துவதாக இருக்கின்றனர். எனவே, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். இது சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தலைவர் பேச முன்வந்தபோதும், நான் அதை தவிர்த்துவிட்டேன். எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.
சேலத்தில் பரபரப்பு: தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று செய்தியாளர்கள் முன்னிலையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்தார். மாவட்ட ஆட்சியர் மீது தொழிலதிபர் ஒருவர் பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே உள்ள பெத்தநாய்க்கன்பாளையத்தில் வரும் 24ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடக்க உள்ளது. முன்னதாக கருணாநிதி சிலையை, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் பகுதியில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரின் இந்த கபளீகர நடவடிக்கை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'அல்வா' சிறப்பு தொகுதி யாருக்கு? மல்லுக்கட்டும் முக்கிய தலைவர்கள் குறித்த சிறப்பு அலசல்!