நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் வரும் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, வாக்களித்து ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்தக்கொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு ஆட்சியர் ரோகிணி பேட்டியளிக்கையில் கூறியதாவது:
சேலம் மாவட்ட பகுதிகளில் 100 விழுக்காடு வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கே முழுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கையாக சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையில் இதுவரை நான்குகோடியே 73 லட்சம் ரூபாயும், 3.9 கிலோ தங்கம், 75 கிலோ வெள்ளி நகைகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இன்று காலை கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட் 73 கிலோ தங்கம், வெள்ளி ஆகியவைவருமானவரித் துறை அலுவலர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றுக்குரிய ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. உரிய நபர்கள் முறையான ஆவணங்களை, சமர்ப்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட 73 கிலோ தங்கம், வெள்ளி, அவர்களிடமே திருப்பி அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.