சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு உதவி தொகை, வாழ்வாதாரத்திற்கு ஒரு வேலை வழங்கக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து வந்துள்ளார். இவரது மனு மீது இதுநாள் வரை மாவட்ட நிர்வாக தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட பிரபாகர், திடீரென தரையில் அமர்ந்து தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர், அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே அமரவைத்தனர். இந்த திடீர் தர்ணா போராட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு மணி நேரமாக பரபரப்புடன் காணப்பட்டது.