பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு அறிவுறுத்தலின்படி செயில் நிர்வாகம் சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தை தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இந்தப் போராட்டத்தில் உருக்காலை தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘மத்திய பாஜக அரசு தன்னிச்சையாக மசோதாக்களை நிறைவேற்றி மக்களின் ஜனநாயக உரிமையை பறித்து வருகிறது. சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், திருச்சி பெல் தொழிற்சாலை, பிஎஸ்என்எல் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வரும் பாஜக எதிர்காலத்தில் இந்தியாவையே தனியாருக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படும் என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும் இது போன்ற தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதைத் தடுக்க அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும், சொத்துகளையும் கொடுத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளார். தமிழ்நாட்டின் உரிமை பற்றியோ மக்களைப் பற்றியோ அவருக்கு எந்த அக்கறையும் இல்லை’ என்று தெரிவித்தார்.