சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கைதி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருக்கும் 40 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகளிர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்து முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் தெரு பகுதியை சேர்ந்தவர், தங்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 இளம் பெண்கள் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கைதான ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனா பாதிப்புள்ள கைதி உடனடியாக சேலம் அரசு மருத்துவமனை கரோனா வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கரோனா வார்டை சுற்றி பலத்த காவல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சேலம் மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் உள்பட 40 பேரை தனிமைப்படுத்தி, அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இப்பெருந்தொற்றிலிருந்து காவல்துறையினரை பாதுகாக்கும் விதமாக சேலம் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், தினசரி பணிகள் அனைத்தும் சாமியானா பந்தல் அமைத்து, அதில் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த கும்பல் கைது!