உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தாக்குதல் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியிருக்க வாய்ப்புள்ளதாகச் சந்தேகமடைந்துள்ள மாவட்ட சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்காகச் சென்ற ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வரையில் சீனாவிலிருந்து சேலத்திற்கு வந்துள்ள 54 பேரை தீவிர கண்காணிப்பு வளையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை வைத்துள்ளது. சேலத்திலிருந்து சென்னை வழியாக சீனாவிற்கு மருத்துவம் படிக்கச் சென்று, சேலம் திரும்பிய மாணவர்களும் சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக சேலத்திற்கு வந்தவர்களும் தற்போது முழுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து சேலம் வந்த 54 பேரும் அவரவர் வீட்டில் வைக்கப்பட்டு மருத்துவக் குழு மூலம் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் .
இது தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதாரத் துறை வட்டார அலுவலர்கள் கூறுகையில், "இந்த 54 பேரும் அவரவர் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தும்மல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் உடனடியாகத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரிய மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள சேலம் அரசு தலைமைப் பொது மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். இதற்காக 24 மணி நேரமும் மருத்துவர்கள், சுகாதாரப் பணி ஆய்வாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு விழிப்புடன் பணியாற்றி வருகிறது” என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே சேலம் அரசு தலைமைப் பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பு தீவிர சிகிச்சை அளிக்க தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் சந்தேகம் - 7 பேர் தொடர் கண்காணிப்பு!