சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்க ஏதுவாக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் மாநகராட்சி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் வைரஸ் நோய்த்தொற்று மூலம் எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு சமாளித்து நோயாளிகளைக் குணப்படுத்தும் வகையில், சேலம் மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அஸ்தம்பட்டி மண்டலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் தொடங்கப்படும் என சேலம் மாநகராட்சி அறிவித்தது.
இதேபோல் அன்னதானப்பட்டி, அம்மாப்பேட்டை மண்டலங்களிலும் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக ரூ. 30 லட்சம் செலவில் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கரோனா வைரஸ் நோய்த்தொற்று சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தொடங்கி வைத்த சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கரோனோ வைரஸ் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக சேலம் உருவாகி வருகிறது.
தற்போது பச்சை மண்டலமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று மூலம் எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க மாநகராட்சி தயாராகி வருகிறது.
முதல்கட்டமாக மூன்று மண்டலங்களில் ரூ. 30 லட்சம் செலவில் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையும். கரோனா இல்லாத மாநகராட்சியாக சேலம் மாறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - குடிபெயர்ந்தோரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த அமைச்சர்