சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (65) என்பவர் கரோனா தொற்று காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 11ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (மே.15) அதிகாலை கழிப்பறைக்குச் சென்ற சுப்பிரமணி நீண்ட நேரமாகியும் படுக்கைக்கு திரும்பவில்லை. இதுகுறித்து தகவலறிந்த செவிலியர்கள் காவல்துறையினர் உதவியோடு தேடிப் பார்த்தபோது, கழிப்பறையில் தான் அணிந்து இருந்த வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியின் மகன் முருகேசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனவே மகன் உயிரிழந்த துக்கத்தில் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து கொல்கத்தா தப்ப முயன்ற கரோனா நோயாளி