சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில், நான்கு மண்டலங்களில் உள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநகரப்பகுதிகளில் கரோனா தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், வீடு வீடாகச் சென்று வீட்டில் இருப்பவர்களின் விவரங்கள் குறித்து, கணக்கெடுப்பு மேற்கொண்டதில், கடந்த 2ஆம் தேதி முதல் நேற்று (ஜூலை 8) வரை, 76 ஆயிரத்து 223 குடியிருப்புகளில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 69 நபர்களின் விவரங்கள் பெறப்பட்டன.
இங்கு கரோனா அறிகுறிகளுடன் இருந்த 158 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில் நான்கு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இக்களப்பணியாளர்கள் வீட்டில் இருப்பவர்களின் பெயர், வயது, தொலைபேசி எண், வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களைப் பதிவு செய்கின்றனர்.
மேலும், சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் விவரம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிவோர் விவரம், குடும்ப உறுப்பினர்களில் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குள் உரிய அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மேற்கண்ட விவரங்களை எவ்வித விடுதலுமின்றி சரியான முறையில் தெரிவித்து, சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தொற்று நோய்த் தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.