கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அந்த மாவட்டத்தில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தும் வருகிறார். மேலும், அந்த மாவட்டத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
அந்தவகையில் முதலமைச்சர் சென்னையிலிருந்து நாளை காலை 8 மணிக்கு கார் மூலம் புறப்படுகிறார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செயதுவிட்டு, தருமபுரி மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட்20) நடைபெறும் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை(ஆகஸ்ட்20)மாலை சேலம் வருகிறார். அதைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மறுநாள்(ஆகஸ்ட்21) வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். நாமக்கல் ஆய்வுக்கூட்டத்தை முடித்துவிட்டு மீண்டும் சேலம் திரும்பி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேலத்தில் தங்கவுள்ளார்.
அங்கு அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் -24) அன்று காலை சேலத்திலிருந்து சென்னை புறப்பட்டுச் செல்வர் எனப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சேலத்தில் காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெடிகுண்டு வீசிக்கொல்லப்பட்ட காவலர்: அதிமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை - மு.க.ஸ்டாலின்