இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அலுவலகப் பணியாளர்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து முன்னெச்சரிக்கையாக தங்களைப் பாதுகாத்திடும் செயல்முறை விளக்கங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்து கைகளை சுத்தம் செய்யும் விதத்தினை செயல்முறையாக செய்து காண்பித்தார்.
இதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கைகழுவி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கு நேரடியாக கைகழுவுதல், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை நேரடியாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நிர்மல்சன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.