புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் சிறந்த சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு விருது மற்றும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்ட வட்டார அளவில் நடைபெற்ற சிறந்த சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களைத் தேர்வு செய்யும் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு, இன்று மாவட்ட அளவிலான போட்டி சேலம் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த சமையல் போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய இருவருக்கும் வரும் சுதந்திர தினத்தன்று சிறந்த பணியாளர் விருது மற்றும் ரொக்கப்பரிசு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். இந்த சமையல் போட்டியில் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சத்துணவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது சத்துணவு பணியாளர்கள் கூறுகையில்," அடுப்பில்லா சமையல் என்ற முறையில் பாரம்பரிய உணவுப் பொருட்களைக் கொண்டு அனைவரும் சமையல் செய்தோம். இதுப் பள்ளி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்பதால் பள்ளி வளாகத்தில் இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
உடலுக்கு கேடு விளைவிக்கும் எண்ணெய் மற்றும் வண்ண பொடிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளையே அதிகம், மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு இதுபோன்ற சமையல் போட்டிகளை ஊக்குவிக்கிறது. அதன் அடிப்படையில் மறந்துபோன நமது பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்தப் போட்டி நடந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்.