சேலம்: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பையுடன் இன்று(டிச.9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, ஏர் கலப்பைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர், பழைய பேருந்து நிலையம் பகுதியில் பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 140 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக, தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அழைத்து பேசாமல் மத்திய அரசு மெத்தன போக்குடன் செயல்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆணவத்தின் உச்சியில் பேசி வருகிறார். பெரும்பான்மை மக்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும். பெரும்பான்மை மக்களின் உணர்வை மதிக்காத அரசு நீடித்தது இல்லை. மத்திய அரசு சர்வாதிகாரமாக நடந்துவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவிற்கு ஆதரவாக, விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு அரசுக்கும், பாஜகவினருக்கும் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பூரில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்