சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் கரோனா தொற்று பாதித்த நபர்கள் தங்கியிருந்த பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் தொடர்ந்து அதிகரிப்பதால், இப்பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பேரூராட்சியில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதையும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதையும், தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கி வாயிலாக காவலர்கள், தன்னார்வலர்கள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் அறிகுறிகள் (வறட்டு இருமல், காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல்) இவற்றுள் ஏதேனும் ஒன்று இருப்பினும் உடனே அருகில் உள்ள அரசு மற்றும் சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்கள் உடனடியாக அவர்களின் சிறப்பு மருத்துவரை அணுகி தேவையான மருந்துகளை உட்கொண்டு, நோயினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்" என்றார்.