சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட புதிய கட்டடம் திறப்பு நிகழ்ச்சி நேற்று (பிப். 22) நடைபெற்றது.
இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். அப்போது அவருடன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "உழவர்களின் துணைத் தொழில் கால்நடை வளர்ப்பு. அந்த வகையில் உழவர்களுக்குத் தேவையான திட்டங்களை அரசு செய்துவருகிறது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் பசு வளர்ப்பு பண்ணையைப் பார்வையிட்டேன். அங்குள்ள பசுக்கள் 60 லிட்டர் பால் கொடுக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள கலப்பின பசுக்கள் 15 லிட்டர் பால் தருகின்றன. இரட்டிப்பு பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளின் வருமானம் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளொன்றுக்கு சுமார் 40 லிட்டர் வரை பால் கறக்கும் கலப்பின பசுக்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சேலம் மாவட்டம் கருமந்துறையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் கலப்பின பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த வகையில், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி சுமார் ஆயிரத்து 22 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகப் பெரியதாக ஆயிரத்து 22 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. நான் சொல்வதைத்தான் செய்துள்ளேன் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும். உழவர்களின் வேதனை, துயரம் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் 20ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி கால்நடைகளின் எண்ணிக்கை 7.40 விழுக்காடு அதிகரித்து 95.19 லட்சமாக உயர்ந்துள்ளது.
வெள்ளாடுகளின் எண்ணிக்கை 17.65 விழுக்காடு அதிகரித்து, 98.89 லட்சமாக உயர்ந்துள்ளது. கோழிகள் 2.84 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் சேலம், தேனி, உடுமலை ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆலம்பாடி கால்நடைகளைப் பாதுகாக்க நான்கு கோடி ரூபாயில் தர்மபுரியில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவைக் காக்க விளக்கேற்றி உறுதிமொழி எடுங்கள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதம்