அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில், அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 12) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் போராட்டம். தர்மம் நிச்சயம் வெல்லும். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்றார்கள். அதையே பின்பற்றி ஜெயலலிதாவும் நல்லாட்சி புரிந்தார்.
ஆனால், திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்காக எந்த நல்ல திட்டமும் நிறைவேற்றவில்லை. மாறாக ஊழலை மட்டுமே செய்தனர்.
அதிமுக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்தது என்பதை ஒரே இடத்தில் ஸ்டாலின் உடன் விவாதிக்க நான் தயார்.
தேர்தல் வரும் போது மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு மக்களை ஏமாற்றுவது தான் திமுக கொள்கை.
அதிமுக ஆட்சியில். தமிழ்நாட்டில் 3 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம் வழங்கி, மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
கல்வி, மருத்துவம் என அனைத்திலும் முன்னனியில் உள்ளது. விரைவில் மேட்டூர் உபரி நீர் சேலம் கிழக்கு மாவட்ட ஏரிகளில் நிரப்பப்படும்
நான் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றபோது, ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் விமர்சித்தார். ஆனால் வறட்சி, புயல் போன்ற சிக்கலான காலங்களில் மக்களை காத்தது அதிமுக அரசு.
ஸ்டாலின் வாரிசு அரசியல் நடத்துகிறார்.
ஜெயலலிதா இருந்தபோது எந்த அளவு ஆதரவு கொடுத்தீர்களோ, அதே ஆதரவை எனக்கும் வழங்கி நல்லாட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: நல்ல ஆட்சியை மலரச் செய்வது தான் மாற்றம்: சீமான்