சேலம் மாவட்டம், தலைவாசலில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வேளாண்மை மற்றும் கால்நடைத் திருவிழாவின் நிறைவு விழா மற்றும் சிறந்த அரங்குகளுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறந்த அரங்குகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், "தெற்காசிய அளவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் அமைக்க அடிக்கல் நாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவினை ஊடகங்கள் வாயிலாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கால்நடை பூங்காக்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிந்து வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.
சேலம் கால்நடைப் பூங்காவில் பாரம்பரிய நாட்டின கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையிலும், செல்லப் பிராணிகளான ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட நாய் இனங்களைப் பாதுகாக்கவும், ஆராய்ச்சி நடத்திடவும் மையம் தொடங்கப்படும்.
நடப்பாண்டிலேயே கால்நடை மருத்துவக் கல்லூரி இங்கு தொடங்கப்பட்டு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும், கால்நடை மருத்துவமனை, பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் பிரிவு, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தலைவாசல் கால்நடைப் பூங்காவில் இடம் பெறவுள்ளன" என்றார்.
இதன்பின்பு பேசிய மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில், "முதலமைச்சர் விவசாயி என்பதால், வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக உணவு உற்பத்தியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக 'கிரிஷி கர்மான்' விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்திருப்பதற்காக, காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ‘பாதுகாகப்பட்ட வேளாண் மண்டலம்’ அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?