சேலம்: சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியில் ஓமலூர் அதிமுக வேட்பாளர் மணியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரையில் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக கோட்டை
சேலம் மாவட்டத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். இந்த தொகுதியில் அனைத்துப் பகுதிகளிலும் தரமான சாலை, குடிமராமத்து திட்டத்தால் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. ஓமலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. அதை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.
எங்கே 2 ஏக்கர் நிலம்?
2006ஆம் ஆண்டில் திமுக தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் தருவதாகக் கூறினார்கள். இங்கு எத்தனை பேருக்கு நிலம் தந்துள்ளார்கள்? அடக்கம் செய்யக்கூட நிலம் தரவில்லை. மாறாக அப்பாவி மக்களிடம் இருந்து நில அபகரிப்புதான் நடந்தது.
மத்திய அரசு பாராட்டு
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதற்காக மத்திய அரசிடமிருந்து விருதைப் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை, சுகாதாரத்துறை, மின்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக பாராட்டு தெரிவித்துள்ள மத்திய அரசு, பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
10 லட்சம் பேருக்கு வேலை
மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு உள்ளதால் தற்போது புதிய தொழிற்சாலைகள் மாநிலத்தை நோக்கி வருகின்றன. 2019ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் மூன்று லட்சத்து 500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 320 தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 27 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளது. இதன்மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
முதலமைச்சர் மாவட்டம்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில், இருக்கும் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். நமது மாவட்டத்துக்கு ’முதலமைச்சர் மாவட்டம்’ என்ற பெயர் நீடிக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.
விஞ்ஞான ரீதியாக மக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்
2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக ஜெயித்தது. இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். ஸ்டாலின் இப்போது பெட்டியில் மனுவை போடச் சொல்கிறார். ஆனால் அதிமுக அரசு விஞ்ஞான ரீதியாக மக்களிடம் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறது.
கோரப்பசியில் இருக்கும் திமுக
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்ததால்தான் நான் முதலமைச்சர் ஆனேன். எனக்கு முதலமைச்சராகும் எண்ணமே கிடையாது. ஆனால் ஸ்டாலின் முதலமைச்சராக வந்தால் அவரது குடும்பத்தினர் சர்வாதிகாரமாக நடந்து கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதனால் கோரப்பசியில் திமுகவினர் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் திமுக தில்லுமுல்லு செய்து வெற்றிபெறப் பார்க்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ’கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு எங்க ஆட்சியில் இவ்வளவு, இப்போ எவ்வளவு...’ - கலந்துரையாடிய ஸ்டாலின்