சேலம்: மேட்டூர் அணையின் 16 கண் மதகு உபரி நீர் போக்கு பகுதியில், விநாயகர் சிலையை கரைக்க சென்ற பள்ளிச் சிறுவர்கள் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் சந்தோஷ் (14), சிவராமன் என்பவரின் மகன் நந்தகுமார் (14) ஆகிய இருவரும், தங்களது நண்பர்கள் சிலருடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர். அதற்காக அவர்கள், தங்களது வீட்டின் அருகே அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து, சிலையைக் கரைப்பதற்காக தொட்டில்பட்டி அருகே 16 கண் மதகு உபரி நீர் போக்கு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், குட்டை போல் தேங்கி உள்ள தண்ணீரில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது சந்தோஷ் மற்றும் நந்தகுமார் இருவரும் சேற்றில் சிக்கி மூழ்கி உள்ளனர். இதை கண்ட மற்ற இரண்டு சிறுவர்கள் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம மக்கள் இரண்டு சிறுவர்களையும் தேடியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த கருமலைக்கூடல் காவல் துறையினர், இரண்டு சிறுவர்கள் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், அந்த கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில், விநாயகர் சிலையைக் கரைப்பதற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அனுமதி இல்லாத இடத்தில் இந்த இரண்டு சிறுவர்களும் விநாயகர் சிலையைக் கரைக்க முயன்றுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கருமலைக் கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை.. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!