சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கோனேரி வளவு பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி செந்தில். இவரது மகன் கதிர்வேல், அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சிறுவன் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது, தொட்டம்பட்டி அருகே , தனக்கு பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தில், சிறுவன் கதிர்வேல் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அடிக்கடி இதுபோல விபத்துகள் நடைபெறுவதாகவும், அதனால் வேகத்தடை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியமாக இருந்ததால்தான் தற்போது சிறுவன் உயிரிழந்துள்ளான் எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாரமங்கலம் புறவழிச் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பள்ளிக்குச் சென்ற சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புகார் அளிக்கவந்த இளைஞரைத் தாக்கிய பெண் காவலர்: வைரலாகும் சிசிடிவி காட்சி