திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்னும் திட்டம் மூலம் அப்பகுதியில் இருந்த மக்களின் குறைகளை மனுவாக பெற்றுக்கொண்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தக் குறைகள் நூறு நாள்களில் தீர்வு காணப்படும் என்றும், இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குறைகளை தீர்வு காணப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
தற்போது இந்த மனுவுக்கு 100 நாள்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலரிடம் மே 9ஆம் தேதி அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.
இதுவரை சுமார் 4.40 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்று (ஜூன் 11) சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் 846 மனுக்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் 145 மனுக்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக நலத் துறையின் கீழ் 9 மனுக்களுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சேவைப் பிரிவில் 100 மனுக்களுக்கும் என மொத்தம் 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அடையாளமாக 10 நபர்களுக்கு ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மனுதாரர்களுக்கு வழங்கினார்.