சேலம் மாநகரம் சின்ன கடை வீதியில் வாழைப்பழ கமிஷன் மண்டிகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதிக்கு ராசிபுரம், ஈரோடு, முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று (அக்.27) சின்ன கடை வீதியில் உள்ள வாழை கமிஷன் மண்டியில் பணியாளர் ஒருவர் பச்சையாக இருக்கும் தாருக்கு ரசாயன மருந்து பூசி பழுக்க வைத்துள்ளார். இது தொடர்பான காணொலி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே மாம்பழங்கள், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பழ வகைகளுக்கு ரசாயன மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்று சேலம் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவ்வாறு விதியை மீறி ரசாயன மருந்து பயன்படுத்தி பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் செய்து கமிஷன் மண்டி உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனால், மீண்டும் வாழைத்தாருக்கு ரசாயனம் பூசப்பட்டு பழங்கள் பழுக்க வைக்கப்படும் அவலம் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, சின்ன கடை வீதி வாழைப்பழ மண்டிகளில் மாநகராட்சி நிர்வாகம் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொழிற்சாலை ரசாயன நீரால் கேள்விக்குறியாகும் மீன் வளர்ப்பு