ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் கோபால் (வயது 45) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை செல்ல சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தார்.
அப்போது அங்கு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜா என்கிற சினேக் ராஜா (வயது 21) வந்தார். பின்னர் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கோபால் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த நிலையில் கோபால் தனது செல்போனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பாதுகாக்க போராடினார். இருந்தும் திருடன் ராஜா, கோபாலை சரமாரியாக தாக்கிவிட்டு செல்போனை பறித்து தப்பித்தார்.
இதனையடுத்து இந்த திருட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கோபால், சேலம் ஜங்சன் ரயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளி ராஜாவை கைது செய்து செல்ஃபோனை அவரிடமிருந்து கைப்பற்றினர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஸ்ரீராமஜெயம் இன்று இறுதி தீர்ப்பை வழங்கினார்.
அதில், கைது செய்யப்பட்ட சினேக் ராஜாவிற்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ரூபாய் 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அபராத தொகையை கட்டவில்லை என்றால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க : வடகிழக்கு மாநிலங்களுக்கு மம்தா விடுத்த வேண்டுகோள் !