சேலம்: சேலம் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் ஜெகநாதனைச் சந்திக்க நேற்று (ஜன.12) வருகை புரிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சுமார் 400 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதற்காக 178 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றுபவர், ஜெகநாதன். இவர் மாநில அரசின் அனுமதியின்றி பூட்டர் அறக்கட்டளை தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த ஆண்டு டிச.26ஆம் தேதி திடீரென கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் கே.தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் உள்ளிட்ட நபர்கள் மீதும் 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சேலம் விமான நிலையம் வந்தார்.
அப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு ஆளுநருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஆளுநருக்கு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர் அறையில் ஜெகநாதனிடம் தனியாக அரை மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தியதாகவும், பின்னர் ஆட்சிக்குழுக் கூட்டத்தில், பெரியார் பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பொறுப்பு தலைவர்களிடம் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தி, பின்னர் கார் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்.
அதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக்கழகம் வந்த ஆளுநரைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழக முறைகேட்டில் சிக்கி கைதான துணைவேந்தர் ஜெகநாதனை பாதுகாக்க நினைக்கும் ஆளுநரைக் கண்டிக்கும் வகையில் நடத்ததாகக் கூறப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக பூட்டர் அறக்கட்டளை மோசடி தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் 6 மணி நேரம் போலீசார் சோதனை நடத்தினர். அதில், பூட்டர் அறக்கட்டளை தொடங்கி மோசடியில் ஈடுபட்ட புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.ஜெகநாதன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்காக சேலம் வருவதாக தகவல் வெளியானது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகம் வருவதற்கு முன்பாகவே, நேற்று காலை 10 மணி முதல் பெரியார் பல்கலைக்கழக நிதித்துறை அலுவலகம், தமிழ்த்துறை, உள்தர மதிப்பீட்டு மையம், தீன் தயாள் உபாத்யாய பயிற்சி மைய வளாகம், புத்தாக்கத் தொழில் பயிற்சி மையம் உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது அந்தந்த துறைத் தலைவர்கள், மைய பொறுப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். தமிழ் துறைத் தலைவர் பெரியசாமி, கணினி அறிவியல் துறைத் தலைவர் கந்தவேலு, தீன் தயாள் உபாத்யாய திட்ட முறைகேடு தொடர்பாக பயிற்சி மைய ஊழியர்கள் பரமேஸ்வரி, வனிதா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தமிழக ஆளுநர் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தில் சோதனை என அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டதால், மாநகர காவல் ஆணையர் பா.விஜயகுமாரி தலைமையில், சுமார் நூற்றக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது நேற்று ஆளுநருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டு, மாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் வருகைக்கு சட்டவிரோதமாக கூடி கருப்புக் கொடி காட்டியதற்கு கோட்ட கவுண்டம்பட்டி விஏஓ மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருப்பூர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதில், சுமார் 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.