சேலம் அடுத்த வீராணம், கோராத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரின் மனைவி முனியம்மாள். இருவரும் வயதான நிலையில் தங்களது சொந்த நிலத்தில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களின் மகன்கள் கனகராஜ், பாஸ்கரன் ஆகியோர் வெளியூரில் வேலை செய்துவருகின்றனர்.
கணவன் - மனைவி இருவரும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மகன் நடராஜுடன் வசித்துவருகின்றனர். முனியம்மாள் தனக்குச் சொந்தமான தோட்டத்து நிலத்திற்கு அருகில் 12 சென்ட் நிலத்தை 2005இல் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்த நிலத்திற்கு அருகில் உள்ள சக்திவேல், கோராத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஊராட்சி கழகச் செயலாளருமான சுப்ரமணி உள்ளிட்டோர் 12 சென்ட் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் முனியம்மாளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில், சுப்ரமணி, சக்திவேல் மீண்டும் நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், இது தொடர்பாக வீராணம் காவல் நிலையத்தினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் மீது எந்த விசாரணையும் நடத்தாமல், ஏற்கனவே இது தொடர்பாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், தற்போது கொடுக்கப்பட்ட புகாரை முடித்துவைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று முனியம்மாள் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக வீராணம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது வீராணம் காவல் துறையினர் முறையான பதில் தரவில்லை என்று கூறினார் முனியம்மாள்.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் தனது நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கணவர் பழனிவேல் உடன் சென்று மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோதாவிடம் புகார் அளித்துள்ளார். திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது நில அபகரிப்பு முயற்சி புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை