சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவருடைய தங்கைக்கு இன்று காலை விழுப்புரம் மாவட்டம் இலவனாசூர் கோட்டையில் திருமணம் நடக்கவிருந்தது. அதில் கலந்துகொள்ள மஞ்சுநாதனுடன் சிலர் காரிலும், மற்ற உறவினர்கள் பேருந்திலும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இவர்கள் சென்றபோது கார் நிலைதடுமாறி தடுப்புச் சுவர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மஞ்சுநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் தாய் சரஸ்வதியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. கார் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து, ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கையின் திருமணத்திற்குச் சென்றபோது, மணப்பெண்ணின் சகோதரர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.