ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்ததானம் செய்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் சேலத்தில் உள்ள தனியார் கல்விக் குழுமம் சார்பில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுப் பேரணியை சேலம் மாநகரக் காவல் ஆணையர் சங்கர், மாநகரக் காவல் துணை ஆணையர் சியாமளாதேவி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ரத்ததானம், உடல் உறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணியானது முள்வாடி கேட், அம்பேத்கர் சிலை, வின்சென்ட், காந்தி ரோடு வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.