தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, தயான் சந்த், துரோணாச்சாரிய ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 29) காணொலி கூட்டரங்கு மூலம் நடைபெற்று தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார்.
கேல் ரத்னா விருது பெற்று தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டிக்கு சென்ற மாரியப்பன் தங்கவேலுவை, சேலம் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகி ஆர்.பி.கோபிநாத் நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய கோபிநாத், "2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று நம்நாட்டிற்கு பெருமைத் தேடித்தந்தார். இதை கவுரவிக்கும் வகையில் விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. மேலும், அவர் பல பதக்கங்களை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பந்தை எதிர்கொள்ள சற்று பயமாக இருந்தது - விராட் கோலி!