சேலம்: பாஜக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சோலைக்குமரன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், தன்னுடன் 2000-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் இணையத் தயாராக உள்ளதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பாஜகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த குட்டி (எ) சோலைக் குமரன், 'சேலம் மாவட்டத்தில் பாஜக செயல்படவில்லை எனவும் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை' எனவும் கூறி, தான் பாஜகவில் தொடரப்போவதில்லை எனவும் அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (மார்ச்.23) பேசிய அவர், 'சேலம் மாவட்டத்தில் பாஜக முற்றிலும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகி வருவதாகவும், இதற்கு காரணம் இங்கு உள்ள மாவட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் கிழக்கு மாவட்டத்தில், தன்னைப் போல ஏராளமான பாஜக நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதால் தான் இந்த முடிவை தான் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மாவட்டத் தலைவர் நெருக்கடி: தன்னை போல், இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த கட்சியை விட்டு இன்று முதல் வெளியேறி உள்ளதாகவும், தனது தலைமையில் கட்சிக்கு வந்த அனைவருமே தற்பொழுது பாஜகவை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சேலம் கிழக்கு மாவட்டத்தில், கட்சி பணிகள் செய்வதற்குத் தடை மற்றும் குளறுபடிகள் ஏற்படுத்தி, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி வளர்ச்சியை தடுத்து வருவதாகவும் அவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதனால், அந்தக் கட்சியில் தொடர்வதில் பலனில்லை என்று முடிவு செய்துதான் விலகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறந்த தலைவர் என்றும்; அவர் பாஜகவிற்கு தலைவர் ஆன பிறகுதான், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக வளர்ந்து வந்தது என்றார். அதேபோல, மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோரும் கட்சி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் பெயரில் தொழில் செய்வபர் நானில்லை: இதனிடையே, தற்போது சேலம் மாவட்ட பாஜகவின் நிலைமை தலைகீழாக உள்ளதாகவும், கட்சியின் தொண்டர்களாக, பொறுப்பில் இருப்பவர்கள் தொழில் எதுவும் செய்யக்கூடாது என்று மாவட்டத் தலைவர் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். செய்யும் தொழிலுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று பேசிய அவர், கட்சியின் பெயரைச் சொல்லி தொழில் நடத்துபவர் நானில்லை என்றார். இத்தகைய காரணங்களின் விளைவாக, இந்தக் கட்சியில் தொடர வேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலையின் கனவு பலிக்காமல் போகலாம்: தொடர்ந்து பேசிய அவர், 'இந்த நிலையை, மாநில தலைமை முழுமையாக உணர்ந்து கொண்டால் மட்டுமே கட்சி நீடிக்கும். இல்லை என்றால், பாஜக தலைவர் அண்ணாமலையின் கனவு தமிழ்நாட்டில், பாஜக ஆட்சி என்ற கனவு பலிக்காமல் போய்விடும் என்று தெரிவித்தார். மேலும், எனது குடும்பத்திற்கும் எனது முன்னோர்களுக்கும் ஒரு அரசியல் பாரம்பரியம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ளது. அதனை இழந்துவிட்டு பாஜகவில் தொடர்வதில் அர்த்தமில்லை' என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமியா ஈஸ்வரி? ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை - புது ரூட்டில் திரும்பும் வழக்கு!