சேலம்: குழந்தைகள் வண்ணங்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். எழுத்துகளைவிட கோடுகளால் உருவான ஓவியங்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதனால்தான் பாடப்புத்தகங்களில் எத்தனை படங்கள் இருக்கிறதென அந்தப் பிஞ்சு விரல்கள் எண்ணத் தொடங்கும்.
கரோனாவால் பள்ளி விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் ஓவியங்களைக் கொண்டு புதிய முறையில் கற்றல் பயிற்சியை அளிக்க முடிவுசெய்துள்ளது வன்னியனூர் அரசுப் பள்ளி. காலத்திற்கேற்ப வன்னியனூர் பள்ளி நிர்வாகம் எடுத்திருக்கும் இந்த முயற்சி பள்ளி சுவர்களை கலைக்கூடமாக மாற்றியுள்ளது.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், இப்பள்ளியானது தன்னை ஓவியங்களால் புதுப்பித்துக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் காரண கர்த்தா அப்பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார்தான்.
வெகுநாள்களுக்குப் பிறகு வரும் மாணவர்களுக்குப் புதுவித அனுபவங்களைத் தரும்விதமாக, பாடங்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களை வகுப்பறையின் உள்ளும் புறமும் வரையப்பட்டுள்ளன. காண்போருக்கு அவ்வோவியங்களின் காட்சிகள் வியப்பளிக்கின்றன.
இந்த ஓவியங்கள் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள், ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொழில்நுட்பங்களைக் கொண்டு பயிலும் வழிமுறைகளும், கட்டமைப்பு வசதிகளை அரசுப் பள்ளிகளும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.