இந்தியாவில் தற்போது வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வெங்காயத்தை தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும் என்று இன்று (நவ.07) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மாதர் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டு, வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தீபாவளிப் பண்டிகையை கூட கொண்டாட முடியாத சூழலை ஏற்படுத்தியதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து கழுத்தில் வெங்காய மாலை அணிந்தும், நாம கட்டிகளை கைகளில் வைத்துக் கொண்டு, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் ராதிகா, “வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வெங்காயம் இல்லாமல் சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளன. விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தவறிவிட்டது. எனவே உடனடியாக நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மன அழுத்தத்தை குறைக்க நூலகம் தொடங்கும் காவல் நிலையம்!